புதுச்சேரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

புதுச்சேரி, பிப்-25

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணியளவில் பிரதமர் சென்னை வந்தார். பின்னர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி சென்றடைந்தார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்பளித்தார்.பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

ரூ.2,426 கோடி மதிப்பில் சட்டநாதபுரம் – நாகை இடையிலான என்.எச். 45-ஏ என்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஜிப்மர், காரைக்கால் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஜிப்மரில் ரூ. 28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாசுப்பேட்டையில் ரூ. 11.85 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ. 14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டடம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.

திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி; புதிய சாலைகள் மூலம் மக்கள் சனீஸ்வர பகவான் கோயிலுக்கும் நாகூர் தர்காவுக்கும் எளிதாக சென்று வர முடியும். புதிய விளையாட்டு மைதானம் மூலம் புதுச்சேரியில் இளைஞர்கள் விளையாட்டில் திறன் பெற வாய்ப்பு கிடைக்கும். அனைவர்க்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜிம்பர் மருத்துவமனையில் ரத்த ஆய்வு பிரிவு தொடங்கப்படுகிறது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் தான் இனி முன்னேறும். இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்கள் புத்திசாலிகள், புதுச்சேரி மண் அழகானது. கடற்கரை தான் புதுச்சேரியின் உயிர் நாடி. புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். புதுச்சேரி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவே நான் வந்துள்ளேன். புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது.

புதிய 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். தொடர்ந்து பேசிய அவர்; கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம் என்பதை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறமை வெளிகொண்டு வரப்படுகிறது. கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *