அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்த சசிகலா..பொதுச்செயலாளர் பதவியுடன் பரபரப்பு அறிக்கை..!

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியது தொடர்பாக அதிமுக கொடியுடன், பொதுச்செயலாளர் என்று சசிகலா அறிக்கை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பிப்-24

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகர் இல்லத்தில், அவரது திருவுருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை வந்ததில் இருந்து மௌனம் காத்துக் கொண்டிருந்த அவர், உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என அதிரடியாக பேசினார்.

இந்நிலையில், சசிகலா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்தின் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அச்சமயம் இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித்தலைவியின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த செய்தி அறிக்கையை வெளியிட்டது, கழக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம், 179/68, ஹபீபுல்லா ரோடு, தியாகராய நகர், என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே சசிகலா சென்னை வந்த போது அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பல எதிர்ப்புகளை தாண்டியும் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே சென்னை வந்தடைந்தார். சசிகலாவுக்கு அதிமுக தரப்பில் இருந்து இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில், சசிகலாவின் இந்த அறிக்கை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *