பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது.

சென்னை, பிப்-24

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அங்குச் சென்றார். அங்கு ராஜேஷ்தாஸ், முதல்வருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நிலையில் இப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இச் சம்பவம் தமிழக காவல் துறையினரிடம் பெரும் அதிர்ச்சியையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதற்கிடையே, பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் அடிப்படையில் விசாரணைக் குழு அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

இக்குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல் துறையின் தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ. அருண், காஞ்சிபுரம் டிஐஜி பி. சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே. ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், இந்த புகார் குறித்து ஓரிரு நாள்களில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டது. முன்னர் இருந்தபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது. கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *