பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை.. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை விசாரிக்க குழு அமைப்பு

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-24

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக விஜயகுமார் ஓய்வு பெற்றதையடுத்து அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு சென்னையில் இருந்து ராஜேஷ் தாஸ் சென்றுள்ளார். விழா முடிந்து முதல்வர் சேலம் சென்றதும், ராஜேஷ் தாஸ் சென்னைக்கு காரில் புறப்பட்டார். உயர் அதிகாரி என்பதால், பல மாவட்ட அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர். அதில் ஒரு மாவட்டத்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனது மாவட்ட எல்லையில் ராஜேஷ்தாஸை வரவேற்றுள்ளார்.

ஆனால், ராஜேஷ்தாஸ் திடீரென பெண் அதிகாரியின் மீது கையை வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண் அதிகாரி எச்சரிக்கையை மீறி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், ராஜேஷ் தாசை எச்சரித்ததோடு, காரில் இருந்து வேகமாக இறங்கி, தனது காரில் ஏறி சென்று விட்டார். அதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்தும், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க விசாகா கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியில், ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி வி.கே. ரமேஷ் பாபு, உள்ளிட்ட 6 பேர் விசாரணைக்குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்த தமிழக அரசின் உள்துறைச் செயலர் இன்று வெளியிட்ட உத்தரவு:

”பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) குறித்து விசாரணை நடத்த கீழ்க்கண்ட உறுப்பினர்கள் கொண்ட “விசாரணை கமிட்டி” அமைக்கப்படுகிறது.

  1. திட்ட வளர்ச்சித்துறை செயலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் – தலைமை அலுவலராகவும்

உறுப்பினர்களாக

  1. தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால்
  2. நிர்வாகப் பிரிவு ஐஜி அருண்
  3. காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி
  4. டிஜிபி அலுவலகத் தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.ரமேஷ் பாபு
  5. லொரேட்டா ஜோனா தலைவர் நிகழ்ச்சி மேலாண்மை, சர்வதேச நீதி பணி (ஐஜெஎம்)

பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டம் 2013-ன்படி (மத்திய சட்டம் 14 முதல் 2013) இந்தக் குழு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். மேலும் விசாரணைக் குழு எவ்வாறு விசாரணை நடத்தும் முறை குறித்து இந்த உத்தரவில் இணைக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ்தாஸ், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *