அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது.. எடப்பாடி தொகுதியில் ஈபிஎஸ், போடி தொகுதியில் ஓபிஎஸ் போட்டி..

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிட வருப்ப மனு வழங்கியுள்ளனர்.

சென்னை, பிப்-24

தமிழக சட்டசபையின் பதவிகாலம் வருகிற மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. எனவே புதிய சட்டசபையை தேர்ந்தெடுக்க அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் தொடர்பான வேலைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிட விரும்புபவர்கள் ஏற்கனவே விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். விருப்ப மனுக்கள் பெறும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. சார்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று விருப்பமனு விநியோகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரம் கட்டணமும், புதுச்சேரியில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட ரூ.5 ஆயிரம் கட்டணமும், கேரளாவில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட ரூ.2 ஆயிரம் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் மனுவாக போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருப்ப மனுவை கொடுத்தார். அதன்பிறகு எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருப்பமனு கொடுத்தார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலும் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்தனர்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் செங்கோட்டையன், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் தங்கமணி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

மேலும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விருப்ப மனுவை கொடுத்தனர்.

விருப்ப மனு கொடுக்க ஏராளமானோர் குவிந்ததால் அ.தி.மு.க. தலைமை கழகம் தொண்டர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி வரை விருப்பமனு அளிக்கலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பூர்த்தி செய்து அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *