ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம் திறப்பு

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சென்னை, பிப்-24

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முன்னர் திறக்கப்பட்ட நினைவிடம் அவரது பிறந்தநாள் அன்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பெரிய அளவில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மீண்டும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கட்சித்தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல்வர், துணை முதல்வர் கட்சி நிர்வாகிகள் புடைசூழ ஜெயலலிதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் 73 கிலோ எடை உடைய கேக் வெட்டப்பட்டது. பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்ட பேரவை தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தொடங்கி வைத்தனர்.

பின்னர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா உயர் கல்வி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா, தேசிய பெண் குழந்தை தின விருது மற்றும் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதுகள் வழங்கும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் ஆளுயர மெழுகு சிலையை அனைவரும் வணங்கினர். இந்த அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சேகரித்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.அறிவுசார் பூங்காவும் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அருங்காட்சியகத்தில் 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *