ஜெயலலிதா சிலைக்கு ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.மாலை அணிவித்து மரியாதை.. கேக் வெட்டி கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சென்னை, பிப்-24

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர். கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினர்.

பின்னர் முதல்வரும் துணை முதல்வரும் நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ கேக்கை வெட்டி முதல்வரும், துணை முதல்வரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *