ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெறுவோம்.. சசிகலா

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சசிகலா தெரிவித்தார்.

சென்னை, பிப்-24

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை சசிகலா வழங்கினார்.

இதன் பின்னர் தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளுக்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். நான் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது கொரோனாவில் பாதிக்கப்பட்டபோது தமிழக மக்கள் என் மீது அன்பு காட்டினார்கள். நான் நலம் பெற்று தமிழகம் வந்தேன். அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நம்முடைய இலக்கு ஜெயலலிதா நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற மீண்டும் தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக நம்முடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.

அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாகும். அதைச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள். நிச்சயமாக இதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்குத் துணை இருப்பேன்”.

இவ்வாறு சசிகலா பேசினார்.

மேலும், செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடிய விரைவில் பொதுமக்களையும், தொண்டர்களையும் நேரில் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *