5 மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

டெல்லி, பிப்-24

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில், அண்மையில் இந்த ஐந்து மாநிலங்களிலும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து அந்தந்த மாநில தேர்தல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக வரைவு அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் முழு ஆணையக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் இக்கூட்டம் கூடுகிறது. இதில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் இடம் பெறுகின்றனர்.

இக்கூட்டத்தில், கரோனா மருத்துவ நெருக்கடிக்கு இடையே பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது எப்படி? எந்தெந்த மாநிலத்தில் எப்போது, எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தலாம், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள், கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு முடிவு எட்டப்படும்.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரைவு அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. விரைவில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *