குஜராத் உள்ளாட்சித்தேர்தலில் பாஜக அமோக வெற்றி.. காங்கிஸ் வாஷ் அவுட்..!
குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. குஜராத் மாநில மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
பிப்-24

குஜராத் மாநிலத்தில் தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும். இங்கு 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதாவது அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய மாநகராட்சிகளில் 576 வார்டுகளுக்கு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜ.க முன்னிலை வகித்தது.
மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 576 இடங்களில் 334 இடங்களை பாஜக வென்றது. அகமதாபாத், சூரத் உள்பட 6 மாநகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியது. இதுவரை காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தேர்தல் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி குஜராத்! மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜக போட்டியிட்ட 85 சதவீத இடங்களை வென்றுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது. பாவ்நகர் நகராட்சியில் மட்டும் பாஜக 44 இடங்களை வென்றுள்ளது” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.