தமிழக இடைக்கால பட்ஜெட்.. அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை, பிப்-24

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

திமுக தலைவர் ஸ்டாலின் :

தமிழக நலனைப் புறக்கணித்து கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி ரூ.5.70 லட்சம் கோடியாக சுமையை அதிகரித்து, இருவரும் நீங்காத நிதிப்பேரிடரை உருவாக்கி விட்டனர்! பிறக்கும் குழந்தையின் தலையில்கூட ரூ.62,000க்கும் மேல் கடன் சுமை உள்ளது. கழகம் ஆட்சிக்கு வந்ததும் நிதி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுத்து, நிலைமையை விரைந்து சீரமைப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் :

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வாழ்க்கைக்கு உதவாத வா(பொ)ய்ப்பந்தல் பட்ஜெட். இடைக்கால நிதிநிலை அறிக்கை வாக்காளர்களைக் கவர்ந்திட பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ள வா(பொ)ய்ப்பந்தலாகும். வளமார்ந்த தமிழகத்தை உருவாக்கி, மக்கள் நல வாழ்க்கைக்கான பாதை அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :

தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழக அரசின் இடைநிலை பட்ஜெட்டில் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதும் கவலையளிக்கும் விஷயங்கள்தான். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசின் வருவாய் நடப்பாண்டில் 17 சதவீதம் குறைந்துவிட்ட நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, கடன்சுமை ஆகியவை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்தில் சென்றுவிட்ட நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், இவை வெறும் அறிவிப்புகளாகவே கருதப்படும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் மதிப்பு கூட்டுவரி, கலால்வரியை குறைக்கும் அறிவிப்பு போன்றவை பட்ஜெட்டில் இல்லை. கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்ட தொகையும் குறைவு.

கொரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்கள் நலன் பற்றியோ, மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க செய்வதற்கான அறிவிப்புகளும் இல்லை. இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் கிடையாது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற செய்யும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களும், தொழில்களும் முன்னேறி வளமான வாழ்வுக்கும், மாநிலத்தின் மேம்பாட்டுக்கும் வழி வகுக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் குடும்பத்தலைவர் மரணத்துக்கு காப்பீடு என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த பட்ஜெட் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லும்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட பல அரசியல் தலைவர்கள் பட்ஜெட்டை பாராட்டி வரவேற்றுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *