துரைமுருகன் பேச அனுமதி மறுப்பு.. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு..!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை, பிப்-23

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
இந்த இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக சட்டப்பேரவை தொடங்கிய உடன் தனது கருத்தை தெரிவிக்க துரைமுருகனை சபாநாயகர் அனுமதிக்காததால் சர்ச்சை எழுந்தது. துரைமுருகன் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.சை அழைத்து விட்டதால் துரைமுருகன் பேச சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைக்கப்பட்டதால் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. துரைமுருகன் பேசுவது அவைகுறிப்பில் அதிவாகாது என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய சலசலப்புக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். இதற்கிடையில் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக ஆட்சி முடியும்போது ரூபாய் 1 கோடி கடன் தான் இருந்தது. அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியது தான் அதிமுக அரசின் சாதனை என குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நேரத்தில் சுயநலத்திற்காக அதிமுக அரசு பணம் கொடுக்கிறது. தமிழக வளர்ச்சியை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டனர். தமிழகத்தின் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.