தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்
தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
சென்னை, பிப்-23

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டு வந்தார். முதலில் ஓமந்தூரார் அரசினர் விடுதி அருகே உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு விநாயகரை வழிபட்டார்.
அதன்பின்னர் 11 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை அடைந்த அவர், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 11-வது முறையாகும்.