பதஞ்சலியின் பொய்யான கொரோனில் மருந்தை விளம்பரம் செய்வதா?.. மத்திய அரசுக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் ஆயுர்வேத மருந்தை எதன் அடிப்படையில் விளம்பரப்படுத்துகிறீர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.

டெல்லி, பிப்-22

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார். இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. இதனால் ஆயூஷ் அமைச்சகமும் இந்த மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து பதஞ்சலி நிறுவனம் கொரோனில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில் கிட்’ என்ற மருந்தை வெளியிட்டது. இது முன்பு வெளியிடப்பட்ட கொரோனில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட ஒன்று என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலக சுகாதார அமைப்பு இதை நிராகரித்தது.

இதுபற்றி இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துகொண்டு, தவறாக புனையப்பட்ட அறிவியலற்ற தயாரிப்பை நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எந்தளவில் நியாயமானது. அதைத் தவறான மற்றும் பொய்யான வழிகளில் விளம்பரப்படுத்துவது எந்தளவில் தார்மீக ரீதியானது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, எந்தவொரு மருத்துவரும் எந்தவொரு மருந்தையும் விளம்பரப்படுத்தக் கூடாது. நவீன மருத்துவராக இருந்துகொண்டு சுகாதாரத் துறை அமைச்சரே ஒரு மருந்தை விளம்பரப்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது.
சில ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை லாபத்துக்காக ஆயுர்வேதத்தை ஊக்குவித்து மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடாது.

கரோனில் ஆயுர்வேத மருந்து உலக சுகாதார அமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சருடன் இணைந்து பாபா ராம்தேவ் கோருகிறார். இது உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது. அறிவியலற்ற தயாரிப்பு மருந்தை சுகாதாரத் துறை அமைச்சர் விளம்பரப்படுத்தியிருப்பதும் அதை உலக சுகாதார அமைப்பு நிராகரித்திருப்பதும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்.

நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராகவும் நவீன மருத்துவராகவும் நீங்கள் விளம்பரப்படுத்திய கரோனில் மருந்து தயாரிப்பின் பரிசோதனை முடிவுகள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *