புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை, பிப்-22

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேட்சை எம்எல்ஏ என 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது. இந்நிலையில், திமுக எம்எல்ஏ-வான வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நேற்று (பிப். 21) அளித்தார். இதையடுத்து, புதுவை காங்கிரஸ் அரசு இன்று (பிப். 22) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது.

இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த திமுகவின் வெங்கடேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.வெங்கடேசன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *