மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.. ராமதாஸ்
மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, பிப்-22

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி மாதத்தின் இறுதியில் விழுப்புரம், கடலூர் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெய்த மழை அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக, விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகள் அரும்பாடுபட்டு அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் எதிர்பாராத மழையில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன.
கோடைக்காலம் வெகுவிரைவில் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டு வந்த நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில்தான் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் சனிக்கிழமை மாலை முதல் பெய்த மழையால், கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வானமாதேவி, சிறுபாக்கம், கூடலையாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராகநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கிவிட்டன. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மூட்டைகள் முளைவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுமையாகச் சேதமடைந்துவிட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கண்ணீர் சிந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் காலம் தவறிப் பெய்த மழையால் கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட விவசாயிகள் அனுபவித்து வரும் துயரங்களைப் பட்டியலிட முடியாது. மிகுந்த எதிர்பார்ப்புடன் சம்பா பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டனர். ஆனால், அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்கள் அனைத்து வகைப் பயிர்களையும் சேதப்படுத்திவிட்டன.
இத்தகைய அனைத்துச் சீற்றங்களையும் கடந்து மிகச்சில விவசாயிகள்தான் சம்பா பயிரைச் சாகுபடி செய்து சில நாட்களுக்கு முன் அறுவடை செய்தார்கள். அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில்தான், திடீரென பெய்த மழை அவர்களின் மிகச் சாமானியக் கனவுகளைக்கூட சிதைத்திருக்கிறது. மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாவிட்டால் அவர்கள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள்.
உலகுக்கு உணவு படைக்கும் சமுதாயம் விவசாயிகள்தான். அவர்கள் கடவுள்களாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், அவர்கள்தான் சபிக்கப்பட்ட சமுதாயமாக உள்ளனர். இயற்கை கூட, யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு, விவசாயிகளைத்தான் இரக்கமின்றி தண்டிக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக அரசால்தான் முடியும். கூட்டுறவு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து விவசாயிகளின் துயரங்களைப் போக்கிய தமிழக அரசுக்கு இதையும் செய்ய வேண்டிய கடமை உண்டு.
தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும், விவசாயிகளின் நலன் கருதி இப்போது 20% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசைத் தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லைக் கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதன்படி, மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்களைத் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று பாமக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.