ராஜினாமா செய்தார் நாராயணசாமி.. புதுச்சேரி மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என சாபம்

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து, நியமன உறுப்பினர்கள் 3 பேரை நியமித்து புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுகவுக்கும் புதுச்சேரி மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, பிப்-22

புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பிறகு, ஆளுநர் மாளிகையில் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “துணைநிலை ஆளுநரிடம் எங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கோரி கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துள்ளோம். இதன்பிறகு முடிவு செய்ய வேண்டியது துணைநிலை ஆளுநர் தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத்தான் வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற எங்களின் கருத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

ஆட்சி கலைப்பு செய்த பாஜகவுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுக்கும் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *