புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலை.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-22

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:

“திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே லட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.

துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து, நாராயணசாமியும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பாஜக அரசு, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்எல்ஏக்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், கிரண்பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

மிகவும் மோசமான, அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பாஜக.

பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயன்றால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும்.

அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டப்பேரவைகளில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *