புதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி.. பெரும்பான்மை இழந்ததால் சபாநாயகர் அறிவிப்பு.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன் மூலம், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

புதுச்சேரி, பிப்-22

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22-ந்தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக கவர்னர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். அப்போது, மத்திய அரசு மீது நாராயணசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இறுதியாக, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு கவிழ்ந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக சிவக்கொழுந்து அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *