மகாராஷ்டிரத்தில் இன்று முதல் அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு தடை

மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டம் மற்றும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, பிப்-22

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று தொலைக்காட்சி மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு கொரோனா தாக்கத்தின் அடுத்த அலையா என்பது அடுத்த 8 முதல் 15 நாள்களில்தான் தெரியவரும். இதற்கு பொது முடக்கம் தீா்வாகாது என்றபோதும், அந்த தீநுண்மியின் பரவலைத் தடுப்பதற்காக அடுத்த சில நாள்களுக்கு பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கு அடுத்த சில நாள்களுக்கு அனுமதி கிடையாது. முககவசம் மட்டும் தான் கொரோனா வைரசில் இருந்து நம்மை காக்கும் ஆயுதம். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் ஆகியவை தான் ஊரடங்கை தவிர்க்க உதவும். அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *