அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும்.. ராஜ்நாத்சிங்

சேலம், பிப்-22

தமிழக பாஜ மாநில இளைஞரணி சார்பில் தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநில இளைஞரணி மாநாடு நேற்று (பிப்-21) சேலம் அருகேயுள்ள மல்லூர் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இம்மாநாட்டிற்கு மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமை வகித்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றிவேல்.. வீரவேல்.. என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து தமிழ் முனிவர்கள் பிறந்த மண்ணை மிகவும் நேசிக்கிறேன். அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்க முடியும். மாற்றத்திற்கான பாதையை நாம் தான் தேர்தெடுக்க வேண்டும். மக்கள் விரும்புவது தாமரை, இரட்டை இலை கூட்டணியை தான். வாஜ்பாய் தலைமையில் முதலில் ஆட்சியமைத்த போது ஆதரித்த ஜெயலலிதாவை ஒரு போதும் பாஜக மறக்காது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். டிஜிட்டல் இந்தியா மூலம் நாட்டில் ஊழல் குறைந்துள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்காக மட்டும் ரூ.100 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டினை நிர்மாணிப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது; பங்குச்சந்தையும் வேகமாக வளர்கிறது. விவசாயிகள் முன்னேற்றத்திற்காக விவசாய கூட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது.

இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. சேலம் – சென்னை வரைவு திட்டப்பணிகள் 2021-22-ல் தொடங்கப்படும். உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டோம். சீனாவுடன் ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜில்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *