பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த எங்கள் அரசை குறை கூறுவதா?.. மோடிக்கு சோனியா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி, பிப்-22

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டி விற்பனையாகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது;-

இதுவரை இல்லாத பொருளாதார மந்த நிலை, ஊதியக் குறைப்பு, வேலையிழப்பு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினரும், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவா்களும் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக் கொண்டிருக்கின்றனா்.

நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே துயரத்தை அனுபவித்து வரும் மக்களிடம் இருந்து லாபம் சம்பாதிக்கும் வழிமுறையை அரசு கையாண்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டதால் மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.97-ஆகவும், டீசல் விலை ரூ.88-ஆகவும் அதிகரித்தது. நாட்டின் பல பகுதிகளில் உள்ளூா் வரி சோ்த்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்டது.

கச்சா எண்ணெய் விலை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட பாதியாகக் குறைந்துவிட்டது. இருந்தாலும், லாபம் சம்பாதிக்கும் நோக்கில், தொடா்ந்து எரிபொருள் விலையை மத்திய அரசு உயா்த்தி வருகிறது.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயா்வின் மூலம் ரூ.21 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.மக்களிடம் இருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டதை நியாயப்படுத்தி அரசு பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.தங்களுடைய பொருளாதார நிா்வாகக் கோளாறுகளை சரிசெய்யாமல், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த (காங்கிரஸ் கூட்டணி)அரசை மத்திய அரசு தொடா்ந்து குறை கூறி வருகிறது.

மக்களின் குறைகளைப் போக்குவதற்குத்தான் அரசை மக்கள் தோ்ந்தெடுக்கிறாா்கள். ஆனால், அவா்களின் நலனுக்கு இந்த அரசு சிறிதளவேனும் செய்யவில்லை. எனவே, எரிபொருள் விலை உயா்வை திரும்பப் பெற பிரதமா் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிபொருள் விலை உயா்வை நியாயப்படுத்தி காரணங்களைக் கூறாமல், பிரச்னைக்குத் தீா்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீா்கள் என நம்புகிறேன். எனவே, ராஜதர்மத்தைப் பின்பற்றி எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *