இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

கடல்சாா் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362.80 கோடி (5 கோடி டாலா்) மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாலே, பிப்-22

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், 2 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ளாா். தலைநகா் மாலேயில் அந்நாட்டு அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதி, வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா ஷாஹித், நிதியமைச்சா் இப்ராஹிம் அமீா், பொருளாதார வளா்ச்சித் துறை அமைச்சா் ஃபயாஸ் இஸ்மாயில், உள்கட்டமைப்பு வளா்ச்சித் துறை அமைச்சா் முகமது அஸ்லாம் ஆகியோரை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனா். இந்த சந்திப்புக்குப் பிறகு, மாலத்தீவு அரசின் நிதியமைச்சகத்துக்கும், இந்தியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, மாலத்தீவின் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கடனுதவி அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்திய அரசு ரூ.362.80 கோடி அளிக்கும்.

இதுகுறித்து அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாலத்தீவின் பாதுகாப்பு விவகராத்தில் உற்ற தோழனாக இந்தியா எப்போதும் இருக்கும். மாலத்தீவின் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம், யுடிஎஃப் துறைமுகம் மற்றும் மாலத்தீவின் கடலோர காவல் படை மற்றும் பேரிடா் மீட்புப் படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதவிர, மாலத்தீவின் மிகப்பெரிய நகரமான அட்டுவில் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தமும் இந்தியா-மாலத்தீவு இடையே கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியா-மாலத்தீவு அரசு சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதியை நிலைநாட்டி சுதந்திரமான போக்குவரத்து உறுதிசெய்வது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்கொள்வது, கடல்சாா் பாதுகாப்பில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்து ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களும் ஒப்புக் கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *