ராஜினாமா செய்ததை தலைமையிடம் கூறிவிட்டேன்…திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பேட்டி
புதுச்சேரி, பிப்-21

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பிப்ரவரி 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.
இதற்காக திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று (பிப்.21) பிற்பகல் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேசன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ”புதுச்சேரியில் தற்போது உள்ள அரசால் தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும்
சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறிவிட்டேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே ராஜிநாமா செய்கிறேன், திமுகவிலிருந்து விலகவில்லை” என்று கூறினார்.