காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் புகார்

காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை என்பதால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக, லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, பிப்-21

புதுவை காங்கிரஸ் அரசுக்கு திமுக, சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவோடு 19 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பலம் 14 எம்எல்ஏக்களாக குறைந்தது.

எதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவுக்கு 3 நியமன பா.ஜனதா எம்.எல்.ஏக்களோடு 14 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது.

ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதுவை சட்டசபையில் ஒரே எண்ணிக்கையிலான சமபலம் ஏற்பட்டது. மேலும், சட்டசபையில் மொத்தமுள்ள 28 எம்எல்ஏக்களில் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும்.

இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி தார்மீக அடிப்படையில் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். மேலும், 14 எதிர்கட்சிகள் எம்.எல்.ஏக்களும் ஒருங்கினைந்து கையெழுத்திட்டு சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசையிடம் மனுவும் அளித்தனர்.

இதனையடுத்து ஆளுநர் உத்தரவின் பேரில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டமன்ற செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்போம் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

அதேநேரத்தில், ஆளும்கட்சியை சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்ககள் ராஜினாமா செய்ய இருப்பதாக எதிர்கட்சியினர் கூறியிருந்தனர். இதனால், புதுவை சட்டசபையில் நாளை நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

இச்சூழலில் இன்று மதியம் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அக்கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவரது இல்லத்தில் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என்னால் ஆட்சி கவிழக்கூடாது என பொறுமையாக இருந்தேன். கட்சியில் எனக்கு போதிய மரியாதை இல்லை என்பதால் ராஜிநாமா செய்துள்ளேன்” என்று கூறினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜிநாமா செய்ததால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு 13-ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சியின் பலம் 14-ஆக உள்ளது.

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால்தான் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *