விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்.. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார், முதல்வர் பழனிசாமி..!

காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விராலிமலை, பிப்-21

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.14,400 கோடியில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் தொடக்க விழா, புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் இன்று காலை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் முழுமை பெற்று, பயன்பாட்டுக்கு வரும்போது இந்தக் கால்வாயில் இருந்து விநாடிக்கு 6,360 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் பாசனத்துக்கு உத்தரவாதம் ஏற்படும்.

இத்திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளும், 42170 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில், தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிமீ தொலைவுக்கு வைகை ஆறு வரை கால்வாய் வெட்டப்படும்.

இரண்டாம் கட்டத்தில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தத 220 ஏரிகள், 23,245 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மூன்றாம் கட்டத்தில், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டப்படும். இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 492 ஏரிகளும், 44,547 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

இதில், முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ரூ.6,941 கோடியில் 118 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஏற்கெனவே தமிழக அரசு ரூ.700 கோடியை ஒதுக்கியது. பின்னர், கால்வாய் வெட்டுவதற்கு குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தமும் விடப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மொத்தம் 262 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதில் காவிரி ஆறு செல்லும் கரூர் மாவட்டம் கட்டளையிலிருந்து, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் நீளத்திற்கு, முதல் கால்வாய் வெட்டப்படுகிறது. 2வது கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை, 109 கிலோமீட்டர் நீளத்திற்கும், 3வது கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34 கிலோமீட்டர் நீளத்திற்கும் கால்வாய் வெட்டப்படுகிறது.

இவ்வாறு வெட்டப்படும் கால்வாய் ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை அருகே, இடைக்காட்டூர் கிராமத்தில் வைகை நதியைக் கடந்து செல்கிறது. வெள்ளக் காலத்தின் போது கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தி, வறட்சி மாவட்டங்களான கரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி என 7 மாவட்டங்களில் விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்க, இத்திட்டம் வகை செய்கிறது.

இத்துடன், காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் ரூ. 3384 கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் 987 கிமீ தொலைவில் 21 ஆறுகள் மேம்படுத்தப்படும். 4,67,345 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.மேலும், டெல்டா மாவட்டங்களில் பழைமை மிக்க பாசனக் கட்டுமானங்களில் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ. 72 கோடியில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படும் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனால், கால்வாய்ப் பாசனத் திறன் 20 சதவிகிதம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *