தூய்மைப் பணியாளர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்..அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, பிப்-21

கோவை தொண்டாமுத்தூரில் தூய்மை பணியாளர்களின் 5 வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், எத்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மன நிறைவை தருகிறது. தூய்மைப் பணியாளர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். அதனால் தான் அவர்களை தூய்மை காவலர்கள் என்று அழைக்கிறோம். முதல்வரும், நானும் எங்கு சென்றாலும் தூய்மைப் பணியாளர்களை பார்த்தால் நின்று பேசிவிட்டுதான் செல்கிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்தது அதிமுக அரசுதான்.

வீடில்லாத நமது அருந்ததியின மக்களுக்கு விரைவில் நிலம் ஒதுக்கி இலவசமாக வீடிகட்டத்தரப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதனிடையே, கோவையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் பகுதியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில், தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக, நிலம் வழங்கியவர்களுக்கு, நில மதிப்பீடு தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.

மேலும், கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குறிச்சி முதல் ஈச்சனாரி வரையில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள, 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி விளக்குகளை, அமைச்சர் இயக்கி வைத்தார்.

அண்ணாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மத்வராயபுரம் ஊராட்சி, சாடிவயல் பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடத்தையும், இக்கரைபோளுவாம்பட்டி செம்மேட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகள், முதியோர் ஓய்வு ஊதிய காசோலைகள் உட்பட பல்வேறு நிதியுதவிக்கான காசோலைகளையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *