2019-2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சென்னை, பிப்-20

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
கலைமாமணி விருது பெறுவோருக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் கலைமாமணி விருது பெற்ற, வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.