கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்..! மு.க.ஸ்டாலின்
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கிய சுய உதவிக்குழு கடன்கள் திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை, பிப்-20

திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற திமுக ஸ்டாலின் பேசியதாவது.
“ஏழை எளிய மக்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் 5 பவுன் வரை வாங்கிய கடன் தள்ளுப்படி செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இன்று நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் திமுக ஆட்சி அமைந்ததும் தள்ளுபடி செய்யும். இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு ஒழுங்காக செயல்படவில்லை.
அவர்களுக்கு கடன் வழங்கப்படவில்லை. மகளிர் சுய உதவிக்குழு நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் அனைத்தும் சீரமைக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல் கூட்டத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்வேன் என கூறினேன். அதை, அடுத்த நாளே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துவிட்டார். இப்போது திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த அறிவிப்பை பழனிசாமி கேட்டுகிட்டிருப்பார். உடனே நாளைக்கு இந்த கடன்களையும் தள்ளுபடி செய்தாலும் செய்வார். நான் என்ன சொல்கிறேன் என கவனித்து வரிசையாக செய்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். கோபம் வந்தாலும் அதுதான் உண்மை.
மக்களின் அனைத்து கவலைகளும் தீர்க்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமையும்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.