காங்கிரஸ் தலைவரான படேலை பாஜக சொந்தம் கொண்டாடுகிறது -பிரியங்கா காந்தி
புதுடெல்லி, அக்டோபர்-31
காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தலைவரான சர்தார் வல்லபாய் படேலை, பாஜக தனதாக்கிக் கொள்ள முயலுகிறது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் சார்பிலும், பாஜக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாஜகவின் இந்த கொண்டாட்டம் பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சர்தார் வல்லபாய் படேல் உண்மையான காங்கிரஸ் தலைவர். காங்கிரஸின் கொள்கையை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். முன்னாள் பிரதமர் நேருவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர். ஆனால் பாஜக அவரை தனதாக்கிக் கொள்ள முயலுகிறது.
படேலுக்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் கட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள், சிறந்த மனிதர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர்களே. அதனால் காங்கிரஸ் தலைவர்களை சுவீகரித்துக் கொள்ள பாஜக முயலுகிறது. சர்தார் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்கள் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.