ஒரு குடும்பத்தின் கையில் எப்பொழுதும் ஆட்சி போய்விடக்கூடாது… அமைச்சர் S.P.வேலுமணி பேச்சு
கோவை, பிப்-20

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளாக ரூ.15 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.குறிப்பாக இலவச வீட்டுமனை பட்டா, தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம், உட்பட பல்வேறு அரசின் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவைக்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசியதாவது :-
இந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மக்களைப்பற்றி கவலைப்படாத நிலையில், அதிமுக அரசு இந்த பகுதியையும் எங்கள் தொகுதியாக எடுத்துக்கொண்டு, பல்வேறு கோரிக்கை வைத்த மக்களை ஏமாற்றாமல் இன்று இலவச பட்டா, தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் உட்பட அரசின் நலதிட்ட உதவிகளையும் செய்துவருகிறோம்.
இந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல், பாராளுமன்ற உறுப்பினரும் பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி வெற்றி பெற்றனர். அதன்பிறகு, இதுவரை தொகுதி மக்களை வந்து பார்க்கவில்லை. அதேநேரத்தில் ஒரு அமைச்சராக உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக உள்ளேன்.
மக்களின் புகாரை பெட்டியில் இட்டு பூட்டு போடுவதற்காக புதிய பொய்யுடன் மக்களை பார்க்க வருகிறார்கள். அதிமுக அரசு மக்களை ஏமாற்றாமல் மக்களின் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் தமிழக முதலமைச்சர்.
விவசாய காட்டுக்குள் காங்கிரீட் தளம் அமைத்து விவசாயம் செய்த ஒரே ஆளை மக்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். மேலும், கொரானா காலத்தில் மக்களின் வருமையை உணர்ந்த முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.
கோவையில் புதியதாக ஐ.டி பார்க் தயாராகி வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 70 வருடமாக பட்டா இல்லாமல் சிரமபட்ட மக்களுக்கு தற்போது பட்டா வழங்கி வருகிறோம்.
நமது மாவட்டத்தில் அரசுபள்ளியில் படித்த 15 பேர் இன்று மருத்துவராக படித்து வருகிறார்கள். முதல்வரின் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளார்கள். சாதாரண மக்கள் ஆட்சிக்கு வரவேண்டும் ஒரு குடும்பத்தின் கையில் எப்பொழுதும் ஆட்சி போய்விடக்கூடாது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.