காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்..நாளை அடிக்கல் நாட்டுகிறார், எடப்பாடி பழனிசாமி

காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை, பிப்-20

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21-ந்தேதியன்று (நாளை) புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும்,

ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவிற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *