தேவரை பற்றி அவதூறு பேச்சு.. விசிக வன்னியரசு வருத்தம் தெரிவித்தார்..!

சென்னை, பிப்-20

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு கொலைகாரர் என கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சிலர் எமது கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும், எமது இயக்கத்தின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதை அரசியல் பார்வையாளர்கள் யாவரும் அறிவர். இது தொடர்பாக , யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்க நேர்ந்தது. அப்போது, மறைந்த தலைவர்களுக்கு தமிழர் என்னும் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி புகழ்வணக்கம் செலுத்தி வருவது தொடர்பான கேள்வியை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் போது, தியாகி இமானுவேல் சேகரன் அவர்களையும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரையும் சம அளவில் பார்க்கும் நாம்தமிழர் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்தேன். விசிகவுக்கு எதிரான நாம்தமிழர் கட்சியின் வெறுப்பரசியலுக்கு பதிலளிக்கும் வகையில்தான் கருத்து சொன்னேன்.

மற்றபடி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றியோ அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரைப் பற்றியோ விமர்சிக்கும் நோக்கத்தில் நான் எதையும் பேசவில்லை. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இது தவறாக திரிக்கப்படுகிறது. அகில இந்திய பார்வர்டு பிளாக் அமைப்பின் மாநில செயலாளர் மகேஸ்வரன் அவர்கள் இன்று என்னை தொடர்பு கொண்டு பேசினார். உள்நோக்கத்தோடு நான் எதையும் பேசவில்லை என்பதை அவரிடம் விளக்கினேன். அது முழுக்க முழுக்க நாம்தமிழர் கட்சிக்கான விமர்சனங்களாகத்தான் முன் வைத்தேன் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

பொதுவாக, சமூகத்தில் உழைக்கும் மக்களின் இணக்கத்தையே விடுதலைச்சிறுத்தைகள் பெரிதும் விரும்புகிறோம். அப்படி தான் எமது தலைவரின் வழிகாட்டுதலில் சனநாயகபூர்வமாக செயல்பட்டும் வருகிறோம். தோழர் மகேஸ்வரன் உள்ளிட்ட முக்குலத்து சமுதாயத்தினரை எனது கருத்து காயப்படுத்தியிருப்பதை அறிந்தும், எமது தலைவரின் வழிகாட்டுதலின்படியும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *