நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்!
வாஷிங்டன் , பிப்-19

நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அமெரிக்காவின் இந்த வரலாற்று மிக்க பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஸ்வாதி மோகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா 2013ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே அதில் ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி மோகன், ஆய்வு பாகம் தயாரிப்பின் வழிக்காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக ஸ்வாதி மோகன் செயல்பட்டார்.
ரோவர் வாகனம் செவ்வாய் கிரகத்தின் தரை பரப்பில் எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பம் டாக்டர் ஸ்வாதி மோகனால் உருவாக்கப்பட்டது. ஸ்வாதி மோகன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர், ஒரு வயதிலேயே அமெரிக்காவிற்கு சென்ற ஸ்வாதி பள்ளியில் பயின்றபோதே விண்வெளி அறிவியலில் நாட்டம் கொண்டவர். விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியதை அடுத்து இந்திய விஞ்ஞானி ஸ்வாதி மோகன் உள்பட நாசா விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது