அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, பிப்-19

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ‘கொரோனா காலகட்டத்தில் இருந்து நெருக்கடியான காலகட்டத்திலும் அதிமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2,500 வழங்கியது. அதோடு 5 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் தான் இது நடந்தது. நெருக்கடியான நேரத்திலும் தேர்தலை பார்க்காமல் மக்களையே பார்த்தது. 55,000 பேருக்கு பட்டா கொடுத்திருக்கிறோம்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் தொகையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். 2000 மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்தது தமிழக அரசு. 1100 புகார் எண்ணில் இதுவரை 60 ஆயிரம் புகார்கள் வந்த நிலையில், 1100 உதவி மையம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.இந்த பூமி உள்ளவரை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்,’என்றார்.

மேலும் பேசிய அவர், ‘கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும். பொது முடக்கத்தின் போது, பொது மக்கள் மீதும் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வரும் வழக்குகள் ரத்து செய்யப்பட உள்ளன. வன்முறை ஈடுபட்ட வழக்குகள், இ-பாஸ் முறையில் முறைகேடு வழக்குகள், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.1,500 வழக்குகள் பதிவான நிலையில், சில வழக்குகளை தவற அனைத்தும் ரத்து செய்யப்படும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. முகக்கவசம் அணியாதது, ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றியது, இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட விதிமீறல்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *