விஷாலின் சக்ரா திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பிப்-18

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இயக்குனர் ஆனந்தன் ஒரு கதை சொன்னார். அந்த கதையை திரைப்படமாக்க கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதே கதையை நடிகர் விஷாலிடம் கூறி சக்ரா என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.நடிகர் விஷால் இந்த திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே சக்ரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், விஷால் தரப்பில் வழக்கறிஞர் சிதம்பரம் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த கதை மீதான காப்புரிமையை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆனந்தன் மனுதாரர் ரவிக்கு கொடுத்துள்ளார். அதன்படி கதையை திரைப்படமாக்க ரவி, ஆனந்தனை இயக்குனராக நியமித்துள்ளார். இந்த ஒப்பந்தம் நிலுவையில் இருந்த நிலையி்ல், அதே கதையை நடிகர் விஷாலுடன் ஒப்பந்தம் செய்து சக்ரா திரைப்படத்தை இயக்குனர் ஆனந்தன் எடுத்துள்ளார். ரவியுடன் ஆனந்தன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து நடிகர் விஷாலுக்கு தெரியுமா என்பது வழக்கின் குறுக்கு விசாரணையின் மூலம் தான் தெரிய வரும். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே திரையரங்குகள் முடிவு செய்யப்பட்டு, ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்துக்கு தடை விதித்தால், அது எதிர்மனுதாரருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். அதேநேரம் மனுதாரரும் பாதிக்கப்படக்கூடாது. எனவே இந்த திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, நிபந்தனையுடன் வெளியிட அனுமதித்து உத்தரவிட்டார்.

சக்ரா திரைப்படம் வெள்ளிக்கிழமை (பிப்.19) தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகள் மூலம் கிடைக்கும் 2 வார வசூல் விவரங்களை நடிகர் விஷால் தரப்பி்ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஓடிடி தளத்தில் 4 மொழிகளில் சக்ரா திரைப்படத்தை வெளியிட செய்து கொண்ட ஒப்பந்த விவரங்களையும் பிரமாண பத்திரமாக விஷால் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து, விசாரணையை வரும் மார்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *