புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு…!ஆளுநராக பதவியேற்ற முதல் நாளே அதிரடி..!!

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சௌந்திரரராஜன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி, பிப்-18

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, திமுக 3 மற்றும் சுயேட்சை 1 ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10 ஆக குறைந்தது.

அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் 3 (பாஜக) என மொத்தம் 14 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்று பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியினர் ஆளுநர் தமிழிசையை சந்தித்து பேசிய சில நிமிடத்தில் மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். இந்நிலையில், வரும் பிப்ரவரி 22-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டி மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சமபலம் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *