அ.தி.மு.க.வை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு?..உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நெல்லை, பிப்-18

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளான இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை தூத்துக்குடியில் இருந்து வள்ளியூருக்கு காரில் சென்ற அவருக்கு நெல்லை மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் சென்ற அவர் பழைய பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியையும் கடந்த 2011 முதல் 2021 வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார். ராதாபுரம் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற 6 பேருக்கு தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்த காரணத்தினால் இந்த ஆண்டு 435 பேர் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி உள்ளது.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் மாணவர்களுக்கு இதுவரை 52 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு மடிக்கணினியின் விலை ரூ.12 ஆயிரம். அம்மா கொடுத்ததை நாங்களும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

உயர்கல்வி படித்தவர்கள் இந்தியாவிலேயே அதிகமாக 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளார்கள். கல்வி துறையை முன்னேற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.

ஆனால் ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்.அ.தி.மு.க. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறினோம். அதை நாங்கள் கொடுத்தோம். தி.மு.க. ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மக்களிடம் உள்ள நிலங்களை அபகரிக்காமல் இருந்தாலே போதும்.தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வாக்குகேட்டு வந்துள்ளோம். ஆனால் தி.மு.க.வினர் ஏமாற்றி ஓட்டுகேட்கிறார்கள்.

இப்போது மக்களை ஏமாற்றி நாடகமாடி மனு வாங்குகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவில்லை. நாங்கள் மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்ய தனி திட்டம் செயல்படுத்தி உள்ளோம்.ஆனால் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி நாடகமாடி திசை திருப்பி வெற்றி பெற முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.என்னுடைய அரசியல் அனுபவம் தான் உதயநிதி ஸ்டாலின் வயது. இன்று அவர் பிரசாரம் செய்கிறார். அரசியல் அனுபவம் இல்லாத அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.

தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் ஸ்டாலின் தான் முதலாளி. வேறு யாரேனும் பிரசாரத்திற்கு சென்றால் கட்சியை கைப்பற்றி விடுவார்கள் என்று பயந்து ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மட்டுமே பிரசாரத்திற்கு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *