ராகுலிடம் தவறாக மொழி பெயர்த்தேனா?.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரியில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததாக கூறும் குற்றச்சாட்டை நாராயணசாமி மறுத்துள்ளார்.

புதுச்சேரி, பிப்-18

புதுச்சேரி வந்த ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை. அப்படியே இருக்கிறது. இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்பை சந்திக்கிறோம். புயலின் போது பல சிரமங்களை எதிர்கொண்டோம். உங்கள் முன்னால் இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை’ என்று குறை கூறினார்.

அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்று ராகுல் காந்தி, தன் அருகில் நின்றிருந்த முதல்வரிடம் கேட்டபோது, ‘அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்தேன். அது குறித்து தான் கூறுகிறார்’ என்று நாராயணசாமி மாற்றி கூறினார்.

அரசு மீதான குற்றச்சாட்டை நேரடியாக முதல்வர் நாராயணசாமி கூறாமல், பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தியிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக தலைவர்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாராயணசாமியின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புரளி செய்தியில் அப்பெண் கூறியது முற்றிலும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதற்கான சான்றை இப்புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, மனித உயிர்கள், விலங்குகள் மற்றும் படகு, இயந்திரம் போன்ற சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும் அப்பெண், நிவர் வந்த பொழுது முதல்வர் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறியபொழுது, நாராயணசாமி அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் ராகுல்காந்தி அவர்களிடம் நான் வந்தேன் என்று மாற்று மொழியில் பதிலளித்தார். அவர் தவறாக மொழி பெயர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாராயணசாமி அவர்கள் புயல் மற்றும் கொரோனா காலத்தில் மக்களிடையே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறியும் ஒரு சிறந்த முதலமைச்சராக விளங்கியது புதுவை மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *