புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார், தமிழிசை

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார். தமிழில் உறுதி மொழி வாசித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை இன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு பொறுப்பேற்றார்.

புதுச்சேரி, பிப்-18

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரியின் 5வது பெண் ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழிசை தனது உறுதிமொழியை தமிழில் வாசித்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டு பொறுப்பு ஏற்றார்.

இந்நிகழ்வில், முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அனைவரும் தமிழிசைக்கு பூங்கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை தமிழிசை ஏற்றார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்று கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *