அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து சசிகலா வழக்கு.. மார்ச் 15ல் விசாரணை
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சென்னை, பிப்-18

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்ததீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். அவர்தாக்கல் செய்த மனுவில் அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதமானது. அந்த தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டுமென கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், உரிமையியல் நீதிமன்ற பதிவாளருக்கு சசிகலா சார்பில் விசாரணையை விரைவாக நடத்தக் கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 4-வது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், வழக்கு மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.