ரூ.914 கோடி மதிப்பில் ஊரக புத்தாக்க திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, அக்டோபர்-31

நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 914 கோடி ரூபாய் மதிப்பிலான ஊரக புத்தாக்க திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 550 கோடி ரூபாய் மதிப்பிலான முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் 112 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், விழா மலரும் வெளியிடப்பட்டது.

விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பாண்டியராஜன், ஆர்.பி.உதயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு நிலோபர் கபீல் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கிராமப் புறங்களில் தொழில் மேம்பாடு, நிதி சேவை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உலக வங்கி நிதியுதவியுடன் 914 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது 26 மாவட்டங்களுக்கு உள்பட்ட 120 வட்டாரங்களிலும், 3,994 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.  இதனையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 150 கோடி ரூபாய் கடனுதவியும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் வழங்கினார். இதனை தொடர்ந்து 525 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *