பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியதற்கு காரணம் என்ன? காங்கிரஸ் மீது பழியை போட்ட மோடி

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டிய நிலையில், “இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

டெல்லி, பிப்-18

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த 9 நாள்களாக தொடர்ச்சியாக விலை உயர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டி விற்பனையானது.

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகத்தில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை புதன்கிழமை காணொலி வழியில் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியா 2019-20 -ஆம் ஆண்டில் தனது எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்தது. அதுபோல, எரிவாயு தேவையில் 53 சதவீதத்தை இறக்குமதி செய்தது. இதுபோல, அதிக அளவில் இறக்குமதியையே நாம் நம்பியிருக்க முடியுமா?

நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்றபோதும், இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னரே கவனம் செலுத்தியிருந்தால், நடுத்தர மக்கள் மீது இந்த அளவு சுமை ஏற்றப்பட்டிருக்காது.

நடுத்தர மக்களின் இந்த நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விகிதத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனால், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க உதவும் என்பதோடு விவசாயிகளுக்கு மாற்று வருவாய் ஆதாரமாகவும் விளங்கும்.

எரிசக்தி இறக்குமதியை நாடு சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதோடு, ஆபத்தைக் குறைக்கும் வகையில் வளங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதன் மீது கவனம் செலுத்தப்படுகிறது. வரும் 2030-இல் நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் 40 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும்.

அதுபோல, இயற்கை எரிவாயு உற்பத்தியையும் இப்போதுள்ள 6.3 சதவீதம் என்ற அளவிலிருந்து 15 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இயற்கை எரிவாயு மீது பலதரப்பட்ட வரிகள் விதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதுவும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையின் கீழ் கொண்டுவரப்படும்

என்று பிரதமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *