கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளியவர்களுக்கு கான்கிரீட் வீடுகள்.. முதல்வர் அதிரடி

கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு எதிர்காலத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நெல்லை, பிப்-18

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6வது கட்ட பிரசாரத்தை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காலை தொடங்கினார். ஸ்ரீவைகுண்டம் பஜாரில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் விவசாயி என்று தானே கூறிக் கொள்ள முடியும்? உணவுப் பஞ்சத்தை போக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை பாதுகாக்கக் கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி என எத்தனையோ இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கவே நாங்கள் பயிர்க் கடனை ரத்து செய்தோம். மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது? மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அரசு என்றுமே முன் நிற்கும்.

முகவிற்கு பெட்டி வாங்கியே பழக்கம். அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னோடு பெரிய பெட்டியினை கொண்டு செல்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார். வறட்சியால், மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதற்கான கடனை தான் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். அதில் என்ன தவறு. முதல்வரை விஷக்கிருமி என்று ஸ்டாலின் கூறுகிறார்.

அதிமுக அரசு எம்எல்ஏ.க்கள் அமைச்சர்கள் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 9,70,000 மனுக்கள் அதிமுக சார்பில் வாங்கப்பட்டது. அதில், 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைத்தது. கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்தோம். குடிமராமத்து திட்டம் முழுக்க, முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு நடந்து வருகிறது. மனிதனுக்கு இன்றியமையாதது நீர். அத்தகைய நீர் மேலாண்மை திட்டத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. தடையில்லா மின்சாரத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்மிகை மாநிலமாக திகழும் தமிழகம், மின்சார உற்பத்திக்காக மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *