மதுரையில் பொது இடத்தில் கருணாநிதிக்கு சிலை திறப்பு.. கலைஞர் கனவு நனவாகும் என ஸ்டாலின் பேச்சு
மதுரை, பிப்-17

தமிழகத்தில் முதன்முறையாக பொது இடத்தில் மதுரை சிம்மக்கலில் ,மைய நூலகம் அருகே மதுரை மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 12 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சிலையைத் திறந்துவைத்து அவர் பேசியதாவது:-
நமது உயிரோடு கலந்து இருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புக்களே, உங்களுக்கு மீண்டும் வணக்கம். தலைவரின் சிலையை மதுரை மாநகரில் நான் திறந்து வைத்திருக்கிறேன். தந்தையின் சிலையை அவரது மகன் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறேன். என்ன பேசுவது எனத் தெரியாமல் நெகிழ்ந்த நிலையில் உங்கள் முன்பு நிற்கிறேன்.
இச்சிலை இங்கு உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றால், முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு கோ. தளபதி ஆகியோர் சுட்டிக்காட்டியது போன்று, இதற்கு பல்வேறு இடையூறுகள் இருந்தன. தடை, இடையூறுகளை மீறி சிலை திறக்க முடியுமா எனக் கேள்விகள் எழுந்தன. முடியும் எனக் கருதினோம். அதன்படி, தலைவரின் சிலையை திறந்து இருக்கிறோம். தலைவர் நினைவிடத்தை நீதிமன்றம் மூலமாக பெற்றது போன்று நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றே இச்சிலையை நிறுவி இருக்கிறோம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவரின் சிலைகள் திறக்கப்பட்டன. முதலில் சென்னை அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. 2 வது அவரது மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலி அலுவலகத்திலும் தொடர்ந்து தலைவரின் குருகுலமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈரோட்டில் திறக்கப்பட்டது. கடைசி வரை அண்ணன் என, முழங்கிய அண்ணாவின் காஞ்சிபுரத்திலும் திறக்கப்பட்டது. இதன்பின் ஓரிரு இடங்களில் தலைவர் சிலை திறக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் தனியார் இடங்களில் நமக்குச் சொந்தமான இடங்களில் திறக்கப்பட்டன.
மதுரையில் எப்படியாவது சிலை வைக்க வேண்டும் எனக் கருதிய நிலையில் அரசு தடை போட்டது. நீதிமன்றத்தை நாடியபோது அனுமதி கிடைத்தது.
இந்த சிலையை தீனதயாளன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். கலைஞர் சொல்லி சிலைகளைத் தயாரித்த தீனதயாளன், கலைஞரின் சிலையையும் அவர் செய் திருக்கிறார் என்றால், இது வரலாற்றில் பதிவாகும் செய்தி.
தீனதயாளனுக்கும் நன்றி சொல்கிறேன். சிலை கட்டமைப்பை உருவாக்கிய பொறியாளர் மணிகண்டனுக்கும் நன்றி கூறுகிறேன். இப்பணியில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முனைப்புடன் ஈடுப்பட்டிருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ஏ.வ. வேலு தானாக முன்வந்து, முன்நின்று இப்பணி முடியும் வரை ஓய்வின்றி முடித்துத் தந்துள்ளார்.
அவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இச்சிலையில் எழுதப்பட்டிருக்கும் 5 கட்டளைகளான அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி.
இந்த முழக்கங்களில் கருணாநிதியில் கனவு நிறைவேற போகிறது. அது நிறைவேறுவதற்கு அவரது சிலையின் கீழ் நின்று அனைவரும் சபதம், உறுதி ஏற்போம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் பொது இடத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை திறக்கப்பட்டதால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.