கடலூர் அருகே போலீஸ் என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடலூரில் வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடலூர், பிப்-17

கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா என்ற வீராங்கையன் (28). கடலூர் உழவர் சந்தை அருகே பழக்கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுப்பராயலு நகர் அருகே சென்ற போது அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து. தப்பியோட முயன்றவரை விரட்டிச் சென்ற கும்பல் அவரை கொலை செய்து தலையை துண்டித்து தலையுடன் தப்பிச் சென்றனர்.

கொலையான வீரா மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, முன்விரோதத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரித்து வந்தனர். கொலையானவர் தலையை சுமார் 200 மீட்டர் தூரத்தில், ஏற்கனவே வீரா சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் கொலையான சேகர் வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்றனர்.

வீராவின் தலைதுண்டிக்கப்பட்ட உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே, தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான வீரா உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீராவை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நள்ளிரவில் 4 பேரை கைது செய்ய முயன்றனர். அதன்படி, அருண், சுதாகர், கமலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா என்பவரை பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற கிருஷ்யாவை காவல்துறையினர் என்கவுண்டர் நடத்தி கொன்றனர்.இதையடுத்து கிருஷ்ணாவின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கிருஷ்ணாவிற்கும் வீராவிற்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *