புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு எனது கடமையை செய்தேன்.. கிரண்பேடி
புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக தனது கடமையை செய்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி, பிப்-17

புதுச்சேரி மாநில ஆளுனர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் ஆளுனரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி ஆளுனர் பொறுப்பை தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
”புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நான் சேவை செய்ய வாய்ப்பளித்த இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பு மூலம் நான் சிறந்த அனுபவம் பெற்றேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது பணிக்காலத்தில் ராஜ்நிவாஸ் ஊழியர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து மக்கள் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றினர். புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன். நான் செய்த பணி புனிதமான கடமை. அரசியலமைப்புக்கு உட்பட்டும், தார்மீகப் பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டுமே நான் எனது கடமைகளை ஆற்றினேன்.
புதுச்சேரி மாநிலத்துக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கைகளிலேயே இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு நல்வாழ்த்துகள்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.