பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழகத்தில், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை, பிப்-16

மதுரை மேலூரில் பள்ளிக்கூடம் அருகே அமைக்கப்பட்ட மதுக்கடையை அகற்றக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் அருகே வைக்க அது ஒன்றும் மளிகைக் கடையோ புத்தகக் கடையோ இல்லை. ஒட்டுமொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. ஆனால் அது பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மதுவிற்பனை மூலம் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலம் முழுவதும் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து மாநில அரசு கவலை கொள்ளவில்லை என்றும் பூரண மதுவிலக்கை ஏற்படுத்தினால், குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும், இவை உள்பட மாநிலத்தில் பல்வேறு மேம்பாடுகள் ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும். உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனையை தமிழக அரசு கவனிக்குமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் வைப்பதற்கு அது ஒன்றும் புத்தகக் கடை கிடையாது. மதுவிற்பனை மூலம் வருவாய் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.