சேலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சேலம், பிப்-16

சேலம் மாவட்டத்தில் 7,100 இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 7,100 பெண்களுக்கு, திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018 வரை 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020 வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு பட்டம் பயின்ற 4,737 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.23.68 கோடி திருமண நிதிஉதவியும், 10-ம் வகுப்பு பயின்ற 2,363 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5.90 கோடி திருமண நிதி உதவியும், தலா ஒரு பவுன் தங்கம் வீதம் ரூ.26.88 கோடி மதிப்பீட்டிலான 7,100 பவுன் (37,872 கிராம்) தங்கமும் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எம்.எல்.ஏக்கள் சேலம் மேற்கு வெங்கடாசலம், வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, மகளிர் திட்டம் சார்பில் “சேலம் மதி” என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, ஓமலூர் அடுத்த காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *