”கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்” -திஷா ரவி கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

சென்னை, பிப்-16

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.

பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *